
கோலா லங்காட், ஏப்-15-கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உணவகம் ஒன்றில் போலீஸ் அதிகாரியை ஆயுதம் ஏந்தியபடி துரத்திச் சென்று சமூக வலைத்தளங்களில் வைரலான நபருக்கு எதிராக தெலோக் டத்தோக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன.
உணவக உரிமையாளர் தியு சியு பான் என்பவருக்கு இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பீங்கான் மங்குகள், மேஜைகள் மற்றும் இதர பொட்களை சேதப்படுத்தியதாக 31 வயதுடைய லோரி ஓட்டுநரான P .மகேந்திரன் மீது முதல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்டவர் மீது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாக தண்டனைச் சட்டத்தின் 352 ஆவது விதியின் கீழ் அவர் மீது மீது இரண்டாவது குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டது.
பிரம்பை பயன்படுத்தி ஹோண்டா சிவிக் காரை கீறி, 3,700 ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியதன் மூலம் மூன்றாவது குற்றத்திலும் , போலீஸ் அதிகாரி கார்ப்பரல் முகமட் பஸ்லான் அஸீரை, அவரது கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்கும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது நான்காவது குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்டது.
இந்த அனைத்து குற்றங்களையும் ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை மணி 3.15 முதல் மணி 3.30 வரை கோலா லங்காட், Telok Mengkuang கில் உள்ள உணவகத்தில் மகேந்திரன் செய்ததாக கூறப்பட்டது.
மாஜிஸ்திரேட் மஸ்லின்டா செலமாட்( Maslinda Selamat ) முன்னிலையில் வாசிக்கப்பட்ட அந்த குற்றங்கள் அனைத்தையும் மகேந்திரன் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 9,100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செலுத்தத் தவறினால் 22 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி அவருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.



