கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் தீபாவளி உபசரிப்பு; இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின மக்கள் பங்கேற்பு

ஷா அலாம், நவ 4 –
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் தீபாவளி உபசரிப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை தாமன் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் என சுமார் 2,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பாப்பாராய்டு, ஜமாலியா ஜமாலுடின், ஆகியோருடன் ஷா அலாம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், ஷா அலாம் மாநாகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் மட்டுமின்றி தொகுதியிலுள்ள பல இனங்களையும் சேர்ந்த வாக்காளர்கள் தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டது குறித்து பிரகாஷ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் பணியாளர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் இந்திய சமூகத்தின் சமூக மேம்பாடு மற்றும் நலனை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த பள்ளிகள்,ஆலயங்கள், குடியிருப்பாளர்கள் சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு பாராட்டி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
மக்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துவதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த பங்கை ஆற்றியிருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு தமதுரையில்
தெரிவித்தார்.



