
கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL தலைநகரில் மூன்று புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நடைபாதைகளில் அமர்ந்து உணவருந்த, ஒரு மேசை மற்றும் நாற்காலிக்கு மாதம் 30 ரிங்கிட் கட்டணத்தில் அனுமதி அளிப்பதும் அவற்றில் அடங்கும்.
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து வணிகர்களுக்கும் அவர்களின் பின்னணி அல்லது வணிக இடத்தின் வகையைப் பொருட்படுத்தாமல் அந்நிபந்தனை பொருந்தும் என பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேசத்திற்கான அமைச்சர் ஹான்னா இயோ Facebook பதிவில் தெரிவித்தார்.
வணிகர்கள் சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட DBKL கிளை அலுவலகங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இடம் மற்றும் நடைபாதையின் அகலம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
பாதசாரிகள் நடக்கும் பாதைகள், சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கான வழித்தடங்கள் மற்றும் அவசரக் கால நடவடிக்கைகளுக்கு இடையூறு நேரக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டே அனுமதி வழங்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துநர்கள், மேஜைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாதத்திற்கு ஒரு மேஜைக்கு 20 முதல் 40 ரிங்கிட் வரை இதற்கு முன் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அதோடு 10,000 ரிங்கிட் வரை பாதுகாப்பு வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டியிருந்தது.
கட்டிடங்களின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாத சிறிய அளவிலான பணிகள் குறித்து DBKL-க்குத் தெரிவிக்கும் வகையில் ஒரு படிவத்தைச் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது என்றும் இயோ குறிப்பிட்டார்.
இதனிடையே, சுகாதாரக் காரணங்களுக்காக மூட உத்தரவிடப்பட்ட வணிக வளாகங்கள், முழுமையான துப்புரவுப் பணிகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குள்ளாகவே மீண்டும் திறக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படலாம். எனினும், உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே அக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றாரவர்.



