Latestமலேசியா

கோவில் தொடர்பான திடீர் சர்ச்சைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியா? சரவணன் சந்தேகம்

தாப்பா, மார்ச்-7-20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் திடீரென இந்து ஆலயங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள், ஒருவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதியோ என, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

குறிப்பாக சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் போன்ற சுயேட்சை சமய சொற்பொழிவாளர்களின் சர்ச்சைக்குரிய செயல்கள் அந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அவர் சொன்னார்.

அரசாங்கத்தைக் கவிழ்க்க உள்ளூரைச் சேர்ந்த சிலர், வெளிநாட்டு சக்திகளுடன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அண்மையில் பத்திரிகைகளில் படித்தோம்; அது போல இந்து கோவில்களுக்கு எதிராக திடீரென தொடரும் இந்த கீழறுப்பு வேலைகளும் அத்தகைய அரசாங்கக் கவிழ்ப்பு முயற்சியாக இருக்கக் கூடும்.

எனவே, இதற்கு பின்னானிலிருந்து தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது யார் என்பதை, அரசாங்கமும் போலீஸும் உடனடியாக விசாரிக்க வேண்டுமென சரவணன் கேட்டுக் கொண்டார்.

இந்து சமயமும் இந்துக்களும் எந்த காலத்திலும் மலேசியாவின் மேம்பாட்டுக்குத் தடையாக இருந்ததில்லை; இஸ்லாம் தான் நாட்டின் தேசிய மதம் என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கான முழு மரியாதையை கொடுத்து வருகிறோம்.

அப்போதைய பொதுப் பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு காலத்தில் பத்து மலை நுழைவாசலில் மேம்பாலம் அமைக்கப்பட்ட போது, சொந்த நிலத்தை நாட்டு நலனுக்காக கொடுத்தது இந்து சமூகம் என சரவணன் சுட்டிக் காட்டினார்.

எனவே, இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான முயற்சிகள் உட்பட, பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை போலீஸ் முறியடிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேராக், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், அத்தொகுதியில் 20 பள்ளிவாசல்களுக்கும், 96 சூராவ் தொழுகையிடங்களுக்கும் நோன்புப் பெருநாள் உதவி வழங்கிய நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!