
கோலாலாம்பூர், ஏப்ரல்-17-சமூக வலைத் தளங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கப் பெற்றோர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
மலேசிய இணையப் பயனீட்டாளர் சங்கமான MCCA-வின் தலைவர் Siraj Jalil அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை அமுல்படுத்தினாலும், பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பு மட்டுமே குழந்தைகளை ஆபத்தான உள்ளடக்கங்கள் மற்றும் பாலியல் சீண்டல்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்றார் அவர்.
குறிப்பாக, இணையக் கல்வி குறித்த விழிப்புணர்வு பெற்றோரிடையே குறைவாக இருப்பது கவலையளிப்பதாக அவர் சொன்னார்.
இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகக் கணக்கு வைத்திருப்பதைத் தடைச் செய்யும் அரசாங்கத்தின் முடிவை அவர் வரவேற்றுள்ளார்.
இது சிறார்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை அல்ல, மாறாக அவர்களின் உளவியல் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அவர் விளக்கினார்.
போலிக் கணக்குகளைத் தவிர்க்க MyDigitalID போன்ற அடையாளச் சான்றிதழ் முறைகளைப் பயன்படுத்துவது அவசியம் என்றும் Siraj பரிந்துரைத்தார்.
அதே சமயம், 16 வயது பூர்த்தியான மாணவர்கள் சமூக ஊடகங்களை முறையாகப் பயன்படுத்த ஏதுவாகக் கல்வி அமைச்சு டிஜிட்டல் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுருங்கக் கூறின், இணையம் பாதுகாப்பானதாக இருக்க, பெற்றோர்களும் அரசாங்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.



