
கோலாலம்பூர், நவம்பர்-4,சர்ச்சைக்குரிய சமயப் போதகர் Dr சாக்கிர் நாய்க்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில்லை என்ற முடிவு தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய அவர், புத்ராஜெயாவில் சாக்கிர் நாய்க் வசிக்கும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கான செலவையும், அவருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கான செலவையும் யார் ஏற்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.
2019-ஆம் ஆண்டு கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்களின் விசுவாசம் குறித்து சாக்கிர் நாய்க் தெரிவித்த கருத்துகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே நாடு கடத்தல் கோரிக்கை விடுத்திருந்தபோதும், சாக்கிர் நாய்க் ஏன் புது டெல்லியிடம் ஒப்படைக்கப்படவில்லை என அரசாங்கம் விளக்க வேண்டும் என ராயர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக மக்களவையில் வேறொரு எம்.பியின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், இந்தியாவுடனான 2010-ஆம் ஆண்டு நாடு கடத்தல் ஒப்பந்தம் மற்றும் 1992-ஆம் ஆண்டு நாடு கடத்தல் சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் முடிவு அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிடமிருந்து புதிய நாடு கடத்தல் கோரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.



