
சுங்கை பட்டாணி, ஜூலை—13- கெடா, சுங்கை பட்டாணி, புக்கிட் செலாம்பாவில் சாலையோரமாக உயிருள்ள ஆண் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9 மணிக்கு தாமான் செம்பாக்கா இண்டாவில் வீட்டின் பின்னால் துணி காய வைத்துக் கொண்டிருந்த மாதுவுக்கே முதலில் குழந்தை வேகமாக அழும் சத்தம் கேட்டது.
சத்தம் வந்த திசையை நோக்கி சுற்றுப் புறத்தில் அவர் தேடிய போது, குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடலில் ஒட்டுத் துணியில்லாமல், கல் தரையில் அக்குழந்தை பரிதாபமான நிலையில் கைவிடப்பட்டிருந்தது.
உதவிக் கேட்டு அவர் கூச்சலிட, அண்டை வீட்டுக்காரர்களும் ஓடி வந்து குழந்தையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் சென்றனர்.
பிறகு அக்குழந்தை சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது.
குழந்தை மீது நடத்தப்பட பரிசோதனையில், அது ஆரோக்கியமாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டது; வலது கண் மற்றும் உடலின் வலப் பக்கத்தில் மட்டும் இலேசான கீறல்கள் இருந்தன; அவற்றுக்கு மருந்து போடப்பட்டது.
குழந்தைக் கைவிடப்பட்ட இடத்தில் மேற்கொண்டு சோதனை நடத்தியதில் அங்கு இரத்தத் துளிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, 17 வயது இடைநிலைப் பள்ளி மாணவன் விசாரணைக்காகக் கைதாகி 2 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
அக்குழந்தையின் தாய் என நம்பப்படும் 19 வயது இளம் பெண்ணும் விரைவில் கைதுச் செய்யப்படுவார் என குவாலா மூடா போலீஸ் கூறியது.
குழந்தையைப் பிரசவித்த கையோடு அவர் மருத்துவமனை வார்டில் சிகிச்சைப் பெற்று வருவது தெரிய வந்துள்ளது. இருவரும் காதல் ஜோடி என நம்பப்படுகிறது.