சிங்கப்பூர், ஜூலை 31 – டிக் டொக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ்சின் (ByteDance) சிங்கப்பூர் அலுவலகத்தின், டஜன் கணக்கான பணியாளர்கள், நச்சுணவு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை, 60 பேருக்கு இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் தென்பட்ட சம்பவம் தொடர்பில், அந்நாட்டு சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களில் 57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
பணியாளர்கள் நோய்வாய்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக பைட்டான்ஸ் கூறியுள்ளது.
பைட்டான்ஸ் அலுவலகங்களில் வழக்கமாக உணவு தயாரிக்கப்படுவதில்லை. பணியாளர்களுக்கு உணவை விநியோகிக்க மூன்றாம் தரப்பு கேட்டர்கள் சேவை பயன்படுத்தப்படுகின்றது.
அதனால், பைட்டான்ஸ் அலுவலகத்திற்கு உணவை விநியோகம் செய்த தரப்பிடம் விசாரணை மேற்கொள்ளப்படுமென, சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.