
கோலாலம்பூர், நவ 14 – சிலாங்கூரில் பாங்கி, சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் கராங்கில் உள்ள மூன்று பள்ளிகள் இன்று காலை தனித்தனி தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டன.
இச்சம்பவங்கள் குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. காலை மணி 6.54க்கு பாங்கி, ஜாலான் 3 இல் உள்ள தேசிய இடைநிலைப் பள்ளியில் முதல் தீ விபத்து பதிவாகியது.
பாங்கி மற்றும் காஜாங்கிலிருந்து தீயணைப்பு வீரர்கள் நான்கு நிமிடங்களுக்குள் நிகழ்விடத்திற்கு வந்து தீப்பிடித்து எரிந்த விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையைக் கண்டுபிடித்தனர்.
அங்குள்ள வகுப்பறைகளின் ஒரு தொகுதியை பாதித்த தீ, காலை 7.07 மணிக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு காலை 7.30 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.
இன்று காலை மணி 8.56 அளவில் சபாக் பெர்னம் , Sungai Lang SBPI பள்ளியின் , தரை தளத்தில் உள்ள ஆசிரியர் ஓய்வறையில் இரண்டாவது தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த சபாக் பெர்ணம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
ஆசிரியர் ஓய்வு அறையில் 10விழுக்காடு பகுதி தீயில் சேதம் அடைந்தது. இதனிடையே Tanjong Karang , Sungai Burung கில் SK Berjaya பள்ளியில் இன்று காலை மணி 10.26 அளவில் மூன்றாவது தீ விபத்து ஏற்பட்டது.
அப்பள்ளியின் நூல் நிலையத்தின் விளக்கு சம்பந்தப்பட்ட அந்த தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பள்ளி பணியாளர் தீயை வெற்றிகரமாக அனைத்தார். இந்த தீவிபத்துகளில் எவரும் காயம் அடையாவிட்டாலும் இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



