சுங்கை பூலோ சிறையில் கைதி‘ தப்பியதற்கு அலட்சியப் போக்கு தொடர்பில் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஏப் 13-சுங்கை பூலோ சிறையிலிருந்து, சிறுவர் பாலியல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவன் தப்பிச் சென்றது குறித்து அலட்சியம் காரணமாக போலீஸ்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 24 வயதான கைதி முகமட் ஹசன் ( Muhammad Hassan )
தப்பிச் செல்ல, அலட்சியம் காரணமா அல்லது நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறை மீறப்பட்டதா என்பதை போலீசார் ஆராய்ந்து வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் ( Shazeli Kahar ) தெரிவித்தார்.
போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார் .
பணியில் இருந்த போலீஸ்காரர்கள் மற்றும் சிறை அதிகாரிகளிடமும், தப்பியோடியதைக் கண்ட மற்ற கைதிகளிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது.
விசாரணை தொடரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் சில அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று Shazeli கூறினார்.
தப்பியோடிய கைதியை தேடும் பணி தொடர்கிறது, அவன் இதுவரை எவரையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் இன்னமும் சுங்கை பூலோ பகுதியில் இருப்பதாக நம்பப்படுவதாக Shazeli சுட்டிக்காட்டினார்.
குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த கைதி நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்த பிறகு சிறைக்கு மாற்றப்படும்போது போலீஸ் காவலில் இருந்து தப்பியோடினான் .



