இந்தியா, மே 2 –கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
வெயிலின் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்ற நிலையில், அதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க, வீட்டில் குளிர்சாதனப் பெட்டியை குளிரூட்டியாகப் பயன்படுத்தி ஓய்வெடுக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
X தளத்தில் முதலில் பதிவு செய்யப்பட்ட அக்காணொளியில், குளிர்சாதனப் பெட்டியை ஒருவர் திறந்து வைத்து, அதற்கு முன்பு ஏர் கூலரை வைத்து, கட்டிலில் நிம்மதியாகப் படுத்து உறங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே சமூக வலைதளவாசிகள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்ட அக்காணொளி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
ஒரு சிலர் அந்த முறை அறையின் வெப்பத்தை அதிகரிக்கும் என்றும், சிலர் குளிர்சாதனப் பெட்டியை இப்படி திறந்து வைத்தால் விரைவில் பழுதாகிவிடும் எனவும் எச்சரித்துப் பதிவிட்டுள்ளனர்.
சில நெட்டிசன்கள் இருப்பதை வைத்து சிறப்பான பொருளை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.