
செர்டாங், மார்ச்-11-சமூக ஆர்வலராக வலம் வரும் எஸ். சந்திரசேகரன் எனப்படும் Cikgu Chandra மீதான தாக்குதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் தீயினால் சதிநாசவேலை போன்ற கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar அதனைத் தெரிவித்தார்.
முதல் சம்பவத்தில், மார்ச் 9-ஆம் தேதி முகமூடி அணிந்த இருவர் பாராங் கத்தியுடன் தனது வீட்டின் கதவை உடைத்து காரை சேதப்படுத்தியதாகவும், அடுத்த நாள் அதிகாலை தனது 3 கார்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் Cikgu Chandra கூறியுள்ளார்.
இதையடுத்து, முதல் சம்பவம் கிரிமினல் மிரட்டலாகவும் இரண்டாவது சம்பவம் தீவைத்து நாசம் விளைவித்ததாகவும் வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
சம்பவத்துக்கான காரணத்தையும் சந்தேக நபர்களைக் கண்டறியவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தேவையற்ற அல்லது சினமூட்டும் யூகங்களை எழுப்பி இன நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என Shazeli கேட்டுக் கொண்டார்.
சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கைப் பாயும் என்றார் அவர்.
முன்னதாக, அத்தாக்குதலைக் கண்டித்த தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.



