Latestமலேசியா

ஜெராம் பாடாங் தொகுதிக்கான 3-வது தேர்தல் அறிக்கை: அடிப்படை வசதிகளை மேம்படுத்த மணிவண்ணன் கோவின் உறுதி

ஜெராம் பாடாங், ஜூலை-20-நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மணிவண்ணன் கோவின், மக்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட தனது மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அடிப்படை வசதிகளை நவீனமயமாக்குவதன் மூலமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், சாலைகளைப் புனரமைப்பது, தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் அதிவேக இணையச் சேவைகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, ஜெராம் பாடாங் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை ராயா போன்ற சில பகுதிகளில், அண்மைய காலமாக 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பல இடங்களில் குறைந்த நீர் அழுத்தம் மற்றும் தொடர் நீர் விநியோகத் தடைகளால் பொது மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நீண்டகாலப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாரியங்களுடன் இணைந்து தடையற்ற தூய்மையான குடிநீர் விநியோகம் கிடைக்கத் தாம் தீவிரமாகப் பாடுபடப்போவதாக மணிவண்ணன் கோவின் தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெராம் பாடாங்கில் மணிவண்ணன், பெர்சாத்து கட்சியின் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன், ஓராங் அஸ்லி கட்சியைச் சேர்ந்த டயானா டால், தேசிய முன்னணியின் டத்தோ Mohd Zaidy Abdul Kadir ஆகியோருக்கு இடையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!