
ஜோகூர் பாரு, ஜூலை 14 – ஜோகூர் மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை மோசமாக இருப்பது குறித்து மந்திரிபுசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸி ( Onn Hafiz Ghazi ) எச்சரித்துள்ளதோடு, நிலைமை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக வர்ணித்துள்ளார்.
ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவராக இருந்துவரும் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் ( Ling Tian Soon ) அண்மையில் மாநிலத்தின் இரண்டாவது பெரிய சிறப்பு மருத்துவமனையான சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சோதனையை மேற்கொண்டபோது இதனை நேரடியாக கண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முக்கிய மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள், உதவி மருத்துவ அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார துறைக்கான ஆதரவு உட்பட பல்வேறு முக்கியமான பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாக முகநூல் பதிவில் Onn Haiz தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, சில வார்டுகளில் ஒரு ஷிப்டில் 10 முதல் 14 க்கும் மேற்பட்ட நோயாளிகளை ஒரு தாதி நிர்வகிக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமை தாதியர்களுக்கு நியாயமற்றது மட்டுமின்றி , நீண்ட காலத்திற்கு கவனிக்கப்படாவிட்டால் நோயாளிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாகிவிடும் .
எனவே இந்த இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அது தொடர்பான துறையின் கவனத்திற்கு மாநில அரசாங்கம் கொண்டுவரும். அதிகரித்து வரும் பணி அழுத்தம் பணியாளர்களின் மன உறுதியை மட்டுமல்ல, நோயாளிகளுக்கான சிகிச்சையின் தரத்தையும் பாதிக்கிறது என்று Onn Hafiz கூறினார்.