பத்து பஹாட், ஜூன் 5 – தொலைப்பேசி வாயிலாக அழைத்து, போலீஸ் போல ஆள்மாறட்டம் செய்த நபர் ஒருவரிடம், மூன்று லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை பறிகொடுத்துள்ளார், ஜோகூர், பத்து பஹாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர்.
கடந்த மாதம் ஆறாம் தேதி, பேராக் போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஆடவன் ஒருவனிடமிருந்து தமக்கு தொலைப்பேசி அழைப்பு வந்ததாக, அந்த 60 வயது மூதாட்டி கூறியுள்ளார்.
சட்டவிரோத பணமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டதால், அம்மூதாட்டியை கைதுச் செய்யப்போவதாகவும், வங்கி கணக்குகளை முடக்கப் போவதாகவும் அவன் மிரட்டியுள்ளான்.
அதோடு, தேசிய தணிக்கை துறையிடம் கொடுத்து விசாரிக்க ஏதுவாக, மூதாட்டியின் வங்கி விவரங்களை ஒப்படைக்குமாறும் அவன் கூறியுள்ளான்.
அதனை தொடர்ந்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு, கட்டங் கட்டமாக, அம்மூதாட்டி 66 ஆயிரத்து 50 ரிங்கிட்டை பணத்தை செலுத்தியுள்ளார்.
எனினும், கடந்த திங்கட்கிழமை தனது வங்கி கணக்கில் இருந்து, இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 945 ரிங்கிட் பணம் குறைந்துள்ளதை அடையாளம் கண்டு கொண்ட அம்மூதாட்டி, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் புகார் செய்ததாக, பத்து பஹாட் இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.