
ஜோகூர் பாரு, ஜூலை-9 – சுகாதாரத் துறையில் நிலவும் காலியிடங்களை விரைந்து நிரப்புமாறு, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜோகூரில் உள்ள முக்கிய அரசாங்க மருத்துமனைகளில் அசாதாரணமான நெரிசல் பிரச்னையைச் சமாளிக்க இது அவசியம் என்றார் அவர்.
ஆள்பல பற்றாக்குறையால் சுல்தானா அமீனா மருத்துவமனை சுல்தான் இஸ்மாயில் மருத்துமனை, தெமங்கோங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் நிலைமை மோசமாகி வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் முழு அளவில் செயல்பட்டு மாநில மக்களுக்கு மிகச் சிறந்த சுகாதார சேவையை வழங்க, சுகாதார அமைச்சான KKM விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரச் சேவையானது ஒரு சலுகையல்ல; மாறாக, அரசாங்கம் கட்டாயமாகப் பூர்த்திச் செய்ய வேண்டிய மக்களின் அத்தியாவசியத் தேவையாகும் என TMJ சுட்டிக் காட்டினார்.
“ஜோகூர் மக்களின் நலனே எனக்கு முக்கியம்; அரசாங்க நிர்வாக கெடுபிடிகளால் அந்நலன் பாதிக்கப்படுவதை தம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.
புதிதாகக் திறக்கப்பட்டுள்ள பாசீர் கூடாங் மருத்துவமனை விரைவில் செயல்படத் தொடங்கவிருப்பதை ஒட்டி, தனது ஃபேஸ்புக் பதிவில் துங்கு இஸ்மாயில் அவ்வாறு கூறினார்.