கோலாலம்பூர், ஜூன், 15 – வரும் ஜூன் 17, திங்கட்கிழமை முதல் சுற்றுலா பேருந்து மற்றும் வேன் வாடகை 20 விழுக்காடு உயருவதாக, மலேசிய உள்நாட்டு சுற்றுலா சங்கம் MITA அறிவித்துள்ளது.
சுற்றுலா துறை அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட பிற அமைச்சுகள் டீசல் மானியம் குறித்து அடுத்த மாதம் கூடி பேசி ஒரு முடிவுக்கு வரும் வரை, ஒரு தற்காலிக ஏற்பாடாக வாடகை உயர்த்தப்படுவதாக, MITA தலைவர் லியோங் ஹூன் மின் ( Leong Hoon Min) தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வால், பேருந்து மற்றும் வேன் செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இது பேருந்து நடத்துனர்களுக்கு சுமையை ஏற்படுத்துவதோடு, சுற்றுலா முன்பதிவையும் பெரிதும் பாதிக்கிறது.
இந்த நடப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டே மனிதாபிமான அடிப்படையிலும் ஒரு குறுகிய கால தீர்வாகவும் சுற்றுலா பேருந்து – வேன் வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹூன் மின் சொன்னார்.
எனினும், அரசாங்கம் அறிவிக்கும் எரிபொருள் விலைக்கு ஏற்ப, வாடகை உயர்வும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வரும் என்றார் அவர்.
சுற்றுலா பேருந்துகளை பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளே பயன்படுத்துவதால், அவற்றுக்கு டீசல் மானியம் வழங்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.