
காஜாங், ஏப்-28-காஜாங்-செரம்பான் விரைவுச்சாலையில் (LEKAS) காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் நடவடிக்கை வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியரான 24 வயதுடைய உள்நாட்டு ஆடவர் காஜாங் அருகே கைது செய்யப்பட்டார்.
நேற்று மாலை 4 மணிக்கு நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தைக் காட்டும் 1 நிமிடம் 26 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
தண்டனைச் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஓராண்டுக்குக் குறையாத மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மிகாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் நோக்கம் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் புரோட்டான் சாகா காரை ஓட்டிச் சென்ற 65 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநர் அளித்த புகாரையும் காவல்துறை பெற்றுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் நஸ்ரோன் குறிப்பிட்டார்.



