பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
தலைநகர், அவான் பெசார் (Awan Besar) LRT இலகு இரயில் நிலையத்தின், வாகன நிறுத்துமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பான, 47 வினாடி காணொளி, @Cd Pham எனும் டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சில கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதை அந்த காணொளியில் காண முடிகிறது.
“ஜூலை நான்காம் தேதி, அவான் பெசார் LRT நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பாதுகாவலர் இல்லாத இலவச கார் நிறுத்துமிடம், வாகனமோட்டிகள் கவனமாக இருங்கள்” என அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.
எனினும், கொள்ளையிடப்பட்ட வாகனங்கள், பிரசரணா (Prasarana) நிறுவனம் ஒதுக்கி தந்திருக்கும், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தபடவில்லை. மாறாக, சட்டவிரோதமாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதுவே, குற்றச்செயல்கள் நிகழ வழி வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பில் கலவையான கருத்துகள் குவிந்து வருகின்றன.
சிலர், சட்டவிரோதமாக சாலையோரத்தில் கார்களை நிறுத்திய ஓட்டுனர்களை சாடியுள்ள வேளை ; சிலர், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, முறையான வாகன நிறுத்துமிடத்தில் தங்களுக்கு நிகழ்ந்த அதேபோன்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.