
புது டெல்லி, அக்டோபர்-19,உணவுப் பொருட்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தவறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், நெஸ்லே மற்றும் யுனிலீவர் (Unilever) நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் Resource Renal Vanilla Flavour Powder என்ற சிறப்பு ஊட்டச்சத்துப் பொருள், உரிய முன் அனுமதியின்றி சந்தைப்படுத்தப்பட்டதாகக் புகார் எழுந்துள்ளது.
மேலும், அந்தப் பொருள் சைவமா அல்லது அசைவமா என்பதைக் குறிப்பிடும் கட்டாயக் குறியீடும் அதன் பொட்டலத்தில் இடம்பெறவில்லையாம்.
அதே சமயம், யுனிலீவர் நிறுவனத்தின் Horlicks Women’s Plus மற்றும் Horlicks Mother’s Plus தயாரிப்புகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
எலும்புகளை வலுப்படுத்துதல், தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், குழந்தைகளின் ஆரோக்கியமான பிறப்பு எடைக்கு உதவுதல் போன்ற விளம்பரக் கூற்றுகள் தவறாக வழிநடத்தக்கூடியவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், தங்களது தயாரிப்புகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டவை என யுனிலீவர் தெரிவித்துள்ளது.
அதோடு, அதற்கான அறிவியல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும்அது கூறிக் கொண்டது.
இரு நிறுவனங்களிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ள நிலையில், அவற்றின் பதில்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



