
தாய் கத்தியால் குத்தி கொலை; அலோர்ஸ்டாரில் தொழிற்சாலை ஊழியர் மீது குற்றஞ்சாட்டு
அலோர் ஸ்டார்,பிப்ரவரி 11-
இந்த மாத தொடக்கத்தில் பலமுறை கத்தியால் குத்தி தனது தாயாரை கொலை செய்ததாக தொழிற்சாலை ஊழியர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் எலியானா இஸ்மாயில் ( Eliana Ismail ) முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது , 29 வயதான அமிருல் ஷபிக் சம்சுல் ( Amirul Shafiq Shamshul Zahari ) அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை மணி 3.15 முதல் காலை 8 மணிக்குமிடையே ஜாலான் தஞ்சோங் பெண்டஹாராவின் தாமான் சுல்தான் அப்துல் ஹலிமில் உள்ள ஒரு வீட்டில் வங்கி நடவடிக்கை நிர்வாகியான 52 வயதுடைய தனது தாயார் ஜஹ்ருல்லைல் பாசிர் ( Zahrullail Basir ) என்பவரை கொலை செய்ததாக அமிருல் ஷபிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 40 ஆண்டு காலம் சிறை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அமிருல் ஷாபிக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடமிருந்து எந்வொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.



