
பாங்காக், ஆகஸ்ட்-24-தாய்லாந்தில் இந்தியப் பாரம்பரிய உணவான பானி பூரி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்நாட்டில் வித்தியாசமான முறையில் பானி பூரியைத் தயாரிக்கும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாக உருளைக்கிழங்கு, மசாலா மற்றும் காரமான நீருடன் பரிமாறப்படும் பானி பூரிக்கு பதிலாக, தாய்லாந்தில் பன்றி இறைச்சி மற்றும் கிரீம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான தெருவோர உணவுகளில் ஒன்றான பானி பூரி, வேறு நாட்டில் அங்குள்ள உணவுப் பழக்கத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அக்காணொளியைப் பார்த்த இந்திய இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அப்புதிய வடிவத்தை ஆச்சரியத்துடன் பாராட்டியுள்ளனர். உணவுகளை வெவ்வேறு நாடுகளின் சுவைக்கு ஏற்ப மாற்றி தயாரிப்பது புதிதல்ல என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் மற்றொரு தரப்போ, பாரம்பரிய பானி பூரியின் சுவை மற்றும் தயாரிப்பு முறையில் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரம்பரிய உணவுகளின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தையும் அத்தரப்பினர் முன் வைத்துள்ளனர்.
பல இந்தியர்களுக்கு, பானி பூரி என்பது வெறும் தெருவோர உணவு மட்டுமல்ல. அது அவர்களின் குழந்தைப்பருவ நினைவுகள் உள்ளிட்ட உணர்வுப்பூர்வ அடையாளத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறுகின்றனர். பானி பூரி இதற்கு முன்பும் பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. ஆனால் பன்றி இறைச்சி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு சமையல் எல்லையைத் தாண்டியுள்ளதாகக் கருதப்படுகிறது. இது என்னடா பானி பூரிக்கு வந்த சோதனை என பலரும் புலம்புவதும் கேட்கிறது.



