
பேங்கோக், மே-18-தாய்லாந்து, Nakhon Patho பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார் 440 கிலோகிராம் எடையுள்ள ‘ஷாபு’ போதைப்பொருளைக் கடத்த முயன்ற 5 மலேசியர்களை அந்நாட்டுப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
அவர்கள் முறையே 4 ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர்.
இரகசியத் தகவலின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய தீவிரக் கண்காணிப்பின் மூலம், சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்த இரண்டு வாகனங்களை மறித்துச் சோதனை செய்தபோது இந்த பெருமளவிலான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் மதிப்பு 20 மில்லியன் ரிங்கிட் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கும்பல் மலேசியாவை மையமாகக் கொண்டு இயங்கி வந்ததாகவும், தாய்லாந்து வழியாகப் போதைப்பொருளைக் கடத்தி அனைத்துலகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுச் செய்யப்பட்ட 5 மலேசியர்களிடமும் தாய்லாந்து போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கடுமையான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அனைத்துலகப் போதைப்பொருள் கட்டமைப்பின் பின்னணி குறித்து இருநாட்டு அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



