
பாங்காக், செப்-30-தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஹோட்டல் அறையின் குளிர்சாதனப் பெட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்பில் சிக்கிய 21 வயதான பெண், தாம்தான் அவ்வாறு செய்ததையு கருக்கலைப்பு மருந்துகளை உட்கொண்டதையும் காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டார்.
அப்பெண், Bang Kapi மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தமக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக முதலில் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 27 அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கழிவறைக்குச் சென்றபோது எதிர்பாராத விதமாக குழந்தை பிறந்ததாகவும், அது உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதனை அடுத்து காவல்துறையினர் அறையைச் சோதனையிட்டதில் குளிர்சாதனப் பெட்டியின் உறைப் பகுதியில் இருந்த குப்பைப் பையில் ஆண் குழந்தையின் உடலை மீட்டனர். மேலும், கருக்கலைப்பு மருந்துகளின் காலி உறைகளும் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கருவைக் கலைக்கும் நோக்கத்தில் இணையம் வழி அந்த மருந்துகளைப் பெற்றதாக அப்பெண் ஒப்புக் கொண்டார். அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



