
பேங்கோக், ஜூன்-8-மலேசியா மற்றும் தாய்லாந்து இடையே ஏற்பட்டுள்ள திடீர் இறால் இறக்குமதித் தடை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கருப்பு புலி இறால் மற்றும் பசிஃபிக் வெள்ளை இறால் உள்ளிட்ட தாய்லாந்தின் 5 முக்கிய இறால் வகைகளுக்கு, ஜூன் ஒன்றாம் தேதி முதல் மலேசியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மீன்வளப் பொருட்களின் உயிரியல் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை என மலேசியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தாய்லாந்தோ இந்த முடிவை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மலேசியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பான WTO மற்றும் ஆசியான் அமைப்பிடம் புகாரளிக்க தாயாராக இருப்பதாக தாய்லாந்து அரசாங்கப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
இந்தத் தடையால் மாதத்திற்கு சுமார் 400 டன் இறால்கள் தேக்கமடைந்துள்ளதால், தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் 13 அவசர நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த உபரி இறால்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவும், உள்நாட்டு விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.



