
ஈப்போ, அக்டோபர்-31 – தீபாவளியை முன்னிட்டு பேராக் மாநில அரசாங்கம், புந்தோங்கில் அமைந்துள்ள 2 இந்து ஆலயங்களின் நீண்டகால நிலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக நிலப்பட்டாக்களையும் அரசிதழ் ஆவணங்களையும் இன்று வழங்குகிறது.
புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தலைமையில் நடைபெறும் தீபாவளி உபசரிப்பில் இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்.

பேராக் அரசு செயலகக் கட்டத்தில் நேற்று நடைபெற்ற முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு, மாநில ட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக, புந்தோங் போலீஸ் நிலையத்திற்கு எதிரில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப்பட்டா இன்றி இயங்கி வந்த பிரசித்தி பெற்ற தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டா வழங்கப்படவுள்ளது.
மேலும், புந்தோங் சிவன் ஆலயத்திற்கான நிலம் முறைப்படி அரசிதழில் பதிவுச் செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் ஆவணமும், தம்புன் ஏழு கன்னிகள் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் நிலப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
பேராக் மாநிலத்தில் இந்து ஆலயங்கள் எதிர்கொள்ளும் நிலச் சிக்கல்களுக்குப் படிப்படியாகத் தீர்வு காணப்பட்டு வருவது, தீபாவளி நன்னாளில் அம்மாநில இந்து மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



