
கோலாலம்பூர், ஏப்ரல் 19 – ம.இ.கா என்றுமே சர்வாதிகார போக்கைக் கையாண்டதில்லை. தேசிய முன்னணிக்கு வலு சேர்க்கும் ஒரு கட்சியாகவே ம.இ.கா. என்றும் இருந்துள்ளது.
தேசிய முன்னணியில் இணைய விரும்பும் எந்த கட்சிக்கும் ம.இ.கா. கதவடைப்பு செய்யாது .நாங்கள் யாரையும் தடுக்க மாட்டோம். பிறகட்சிகள் தேசிய முன்னணியில் சேர இணக்கம் காணப்பட்டபோது ம.இ.கா.தான் தடுத்தது என்ற களங்கம் இனியும் எங்களுக்குத் தொடர வேண்டாம். யார் வேண்டுமானாலும் தேசிய முன்னணியில் இணையலாம். அதனை நாங்கள் வரவேற்போம் என்ற ம.இ.கா.தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் செய்தி இன்பத்தேனாக காதில் பாய்ந்ததாக தான்ஸ்ரீ குமரன் இன்று குறிப்பிட்டார்.
வரலாற்றுபூர்வமான இச்செய்தி ம.இ.கா.மீதிருந்த களங்கம் நீக்கப்பட்டிருப்பதுடன், தேசிய முன்ன்ணியை ஆதரிக்கும் இந்தியர் கட்சிகள் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் செயல்படவும் வழிவகுப்பதுடன், கடந்த ஓராண்டாக ம.இ.கா.வின் எதிர்கால நிலைப்பாடு குறித்து கூறப்பட்ட பல ஆருடங்கள் ” ம.இ.கா.வின் இறுதி முடிவுகள் எப்போதும் தூரநோக்கு கொண்டவையாகத்தான் இருக்கும்” என்பதனை இம்முடிவு காட்டுவதாக குறிபிட்டார்.
மேலும் தொடர்ந்த அவர், அரசியலில் வெற்றி தோல்வி என்பது அன்றைய நாட்டு நிலைமை, மக்களின் விருப்பு, வெறுப்பு இவையே தேர்தல் முடிவாக அமைகின்றன.
தோல்வியை கண்டு துவண்ட வரலாறு ம.இ.கா.விற்கு இல்லை.1955-இல் அம்னோ ம.சீ.வுடன் கூட்டணி அமைத்து கூட்டரசு சட்ட மன்றத் தேர்தலிலும் 1959, 1964 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றியை ஈட்டினாலும் 1969-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளும், மே 13 இன கலகமும் , பாஸ், கெராக்கான், மமுக. மற்றும் சபா சரவாக் கட்சிகளையும் இணைத்து தேசிய முன்னணி உருவாக ம.இ.காவும் காரணமக இருந்தது என்று விவரித்த தான்ஸ்ரீ, பாஸ் கட்சி சில ஆண்டுகளில் வெளியேறியது.
2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப்பின் அம்னோ-மசீச-மஇகா-பிபிஆர்எஸ் தவிர மற்ற கட்சிகள் எங்கோ மறைந்தன.
அண்மையில் பிபிபி தன்னை மீண்டும் தேசிய முன்னணியில் இணைத்துக்கொண்டது.இந்த நிலையில் தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா.வெளியேறும் என்ற ஆரூடங்கள் மனதில் நெருடலை ஏற்படுத்தினாலும் கட்சித்தலைவரின் செய்தி மகிழ்ச்சியளிப்பதாக ம.இ.கா.வில் எழுபது ஆண்டுகள் பயணிக்கும் மூத்த தலைவரான டான்ஸ்ரீ குறிப்பிட்டவர், இளைய தலைமுறை அரசியல்வாதிகளுக்காக ம.இ.கா.வின் வரலாற்றின் சில சுவடுகளை நினைவுறுத்தினார்.
நாடு சுதந்திரமடைந்தபின் பல அரசியல் கட்சிகள் தோன்றின. அவற்றில் இந்தியத் தலைவர்கள் பலர் வலம் வந்தனர். இந்தியர்களின் நலன் குறித்து நாடாளும்மன்றம், சட்ட மன்றங்களில் குரல் எழுப்பினர்.மறுப்பதகில்லை. அவர்கள் பருவகாலத் தலைவர்கள். அவர்களது கிணற்றிலோ கிடப்பிலோ போடப்பட்டன…
ம.இ.கா. அப்படியல்ல. இரண்டாம் உலகப் போருக்குப்பின் வறுமையிலும், ஏழ்மையிலும், திக்கு தெரியாமல் தவித்த இந்தியர்களை அரவணைத்து, பாதுகாத்து அவர்களது நலன்பேண தோற்றுவிக்கபெற்ற சமூக நல இயக்கம்.
நாட்டு நலனையும் சமூகத்தின் தேவையையும் கருதி அரசியல் பாட்டையில் நடைபோட தொடங்கிய ம.இ.கா. பொதுத் தேர்தல்களில் பல வெற்றிகளையும் தோல்விகளை சந்தித்தாலும், அரசியல் வேறுபாடின்றி இந்தியர்கள் அனைவரும் மழையிலும் வெயிலிலும் தங்கிசெல்லும் ஆலமரமாக மட்டுமல்லாது சமுதாய தேவையை நிறைவு செய்யும் அறச்சாலையாகவும் செயல்படுவது வரலாறு வெட்டிய வாய்க்கால்.
கைம்மாறு மருதாமல் சமுதாய நலன்பேணும் ம.இ.கா.தலைவர்களப் பாராட்டுவதுடன் தேசிய முன்னணியில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவதாக டான்ஸ்ரீ குமரன் கூறினார்.



