நடைப்பாதையில் மோசமாக நடத்தப்பட்ட இந்தியப் பிரஜை சாஃபியுடின் இன்று தாயகம் திரும்புகிறார்; கடப்பிதழை ஒப்படைத்து, விமான டிக்கெட், அபராதத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் முதலாளி

கோலாலம்பூர், டிசம்பர்-2,
மலேசியாவில் சிக்கித் தவித்த இந்தியப் பிரஜை சாஃபியுடின் பக்கீர் முஹமட், இன்று தனது சொந்த ஊரான தமிழகத்திற்கு திரும்புகிறார்.
சாஃபியுடின், 2024 மார்ச் மாதம் சமையல்காரர் வேலைக்காக மலேசியா வந்தார்.
ஆனால் வந்திறங்கிய அன்றே கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சம்பளமும் தாமதமானதால், 6 மாதங்கள் வீதியிலேயே தங்கியிருந்தார்.
அண்மையில் கூட அவரை வங்கியொன்றின் நடைப்பாதையிலிருந்து பாதுகாவலரான ஒரு பெண்ணும் இன்னோர் ஆடவரும் துரத்தி, தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் உள்ளூரைச் சேர்ந்த நல்லுள்ளம் Anthony Lian அவருக்கு தற்காலிகமாக தங்க இடம் வழங்கினார்.
இந்நிலையில், பொது மக்கள், Anthony Lian, உணவகச் சங்கங்கள், தூதரகம் ஆகிய தரப்புகள் இணைந்து நடவடிக்கை எடுத்தனர்.
அவ்வகையில் சம்பள பாக்கி அனைத்தும் தீர்க்கப்பட்டது.
கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில், அவரது முன்னாள் முதலாளி கடப்பிதழை ஒப்படைத்ததுடன், விமான டிக்கெட் மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட சாஃபியுடின் கூடுதல் காலம் இந்நாட்டில் தங்கியதற்கான அபராதத் தொகையையும் ஏற்றுக்கொண்டார்.
சாஃபியுடினும் முன்னாள் முதலாளியும் பரஸ்பர மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.
“எனக்கு குடும்பத்துடன் சேர வேண்டும், அதுவே என் ஆசை” என சாஃபியுடின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.



