Latestமலேசியா

நலத்திட்ட உதவி மோசடி: RM 8,000 மதிப்புள்ள நகைகளை இழந்த மூதாட்டி

ஈப்போ, ஜூலை-5 – நலத்திட்ட உதவி வழங்குவதாகக் கூறி, பேராக் தெலுக் இந்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏமாற்றிய மோசடிக் கும்பலிடம், 67 வயதுடைய மூதாட்டி ஒருவர் 8,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகளை இழந்துள்ளார்.

ஜூன் 29-ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அம்மூதாட்டி அங்குச் சென்றபோது, 50 வயதிலான ஒரு மாது அவரை அணுகி, தம்மை சமூக நல இலாகா அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மாதா மாதம் 2,000 ரிங்கிட் அரசாங்க நலத்திட்ட உதவியைப் பெற தகுதியுடையவர் என மூதாட்டியை அம்மாது நம்பவைத்துள்ளார்.

பின்னர், உதவித் தொகையைப் பெறுவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியாக, அணிந்திருந்த நகைகளை கழற்றி ஒப்படைக்குமாறும் மூதாட்டியிடம் அம்மாது கூறியுள்ளார்.

கொஞ்சமும் யோசிக்காமல், தம்மிடமிருந்த தங்கச் சங்கிலி, ஒரு ஜோடி தங்கத் தோடு, 3 தங்க மோதிரம் ஆகியவற்றை மூதாட்டி கழற்றிக் கொடுத்து விட்டார்.

சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற பிறகே, தாம் மோசடிக்குள்ளானதை மூதாட்டி உணர்ந்து போலீஸில் புகார் அளித்தார்.

விசாரணையில் இறங்கிய போலீஸார், சந்தேக நபரையும் வயது வந்த அவரின் 2 பிள்ளைகளையும் கைதுச் செய்து தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், தெலுக் இந்தானில் ஓர் அடகுக் கடையில் விற்கப்பட்ட மூதாட்டியின் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

பொது மக்கள், குறிப்பாக முதியவர்கள், அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் நலத்திட்ட உதவி அல்லது பரிசு தொடர்பான வாக்குறுதிகளை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் குறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!