
கோலாலம்பூர், ஜூன்-23 -மூன்று நாட்கள் நடைபெற்ற (Rain Rave Water Music Festival) எனப்படும் நீர் அலை இசை விழாவின் மூலம் சுமார் 392.23 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளாதாரப் பலன்கள் கிடைத்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோ கிங் சிங் (Tiong King Sing) இன்று தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி 320.43 மில்லியன் ரிங்கிட் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதே வேளையில் தெரெங்கானு, மலாக்கா, லாபுவான், நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் லங்காவி ஆகிய ஆறு மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் கூடுதலாக 71.9 மில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஏப்ரல் 30 ஆம்தேதி தொடங்கி மே 2 ஆம்தேதிவரை நடைபெற்ற இந்தத் தொடர்ச்சியாக நிகழ்வுகளில் மொத்தம் சுமார் 415,000 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
கோலாலம்பூரில் நடைபெற்ற இந்தத் திருவிழா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 150,000 உள்நாட்டுப் பார்வையாளர்களையும்; சீனா, ஜப்பான், வங்கதேசம், இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 100,000 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்தது.
விசிட் மலேசியா 2026 பிரச்சாரத்தின் கீழ் மலேசியா செயல்படுத்தி வரும் ‘நிகழ்ச்சி-சார்ந்த சுற்றுலா வியூகம் வெற்றியடைந்துள்ளதை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை, அவர்களின் செலவினம் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கியத் திருவிழாக்கள் ஆக்கப்பூர்வமாக திகழும் வகையில் இந்த வியூகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு 15 மில்லியன் ரிங்கிட் என்றும், அதில் 11 மில்லியன் ரிங்கிட் அரசாங்கத்தாலும் 4 மில்லியன் ரிங்கிட் தனியார் துறையாலும் வழங்கப்பட்டதாகவும் தியோங் குறிப்பிட்டார்.
அரசாங்கம் செலவிட்ட ஒவ்வொரு 1 ரிங்கிட்டிற்கும், இந்நிகழ்ச்சி சுமார் 36 ரிங்கிட் மதிப்பிலான பொருளாதாரப் பலன்களை ஈட்டித் தந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார் .



