
சிரம்பான், அக்டோபர்-18 – நெகிரி செம்பிலானில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பள்ளி மாணவிகளின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
14 முதல் 17 வயதுக்குட்பட்ட 5 மாணவிகள் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் போலீசில் புகார் அளித்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் தெரிவித்துள்ளது.
அப்போதே, பள்ளி அளவிலான கட்டொழுங்கு நடவடிக்கையாக அம்மாணவன் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தான்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 5 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
விரைவிலேயே விசாரணை அறிக்கைகள் நிறைவுப் பெற்று, மேல் நடவடிக்கைக்காகக் சட்டத் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



