
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் செல்லாது; தற்போதைய உறுப்பினர்களே தொடர்வர் – மந்திரி பெசார் விளக்கம்!
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு மந்திரி பெசாரின் ஆலோசனை அவசியம் என்றும், அத்தகைய ஆலோசனை எதனையும் தாம் வழங்கவில்லை என்றும் அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஹாஜி இஸ்மாயில் பின் லாசிம் தெரிவித்துள்ளார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதில் மாநில ஆட்சியாளருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பின் பிரிவு 40(1)-இன் கீழ், மாநில நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளில் யாங் டி பெர்துவான் பெசார், மந்திரி பெசார் மற்றும் மாநில ஆட்சிக்குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், அரசியலமைப்பின் பிரிவு 40(2)-இல் குறிப்பிட்டுள்ள விவகாரங்களில் மட்டுமே மாநில ஆட்சியாளர் தமது சுயவிருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தன்னிச்சையாகப் பதவி நீக்கம் செய்வதோ அல்லது அவர்களின் பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோ அந்தச் சுயவிருப்ப அதிகாரத்தின் கீழ் வராது என அவர் விளக்கினார்.
மேலும், அரசியலமைப்பின் பிரிவு 38(5)-இன் கீழ் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பான மாநில ஆட்சியாளரின் அதிகாரம், மந்திரி பெசாரின் ஆலோசனைக்கு உட்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மந்திரி பெசாரின் ஆலோசனை அல்லது அதிகாரப்பூர்வ கோரிக்கையின்றி ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்வது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அத்தகைய நடவடிக்கைக்குச் சட்டரீதியான அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாகத் தாம் எந்தவொரு ஆலோசனையையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், தற்போதைய உறுப்பினர்களின் நியமனம் தொடர்ந்து செல்லுபடியாகும் எனத் தெளிவுபடுத்தினார்.
இதனால், புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தற்போதைய உறுப்பினர்களே வழக்கம்போல் தங்களது பணிகளைத் தொடர்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில நிர்வாகத்தின் நிலைத்தன்மையையும் மக்களின் ஆணையையும் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மாநில அரசு தொடர்ந்து செயல்படும் என அவர் வலியுறுத்தினார்.



