
பாரீஸ் – ஜூலை-20 – பிரான்ஸில் பிறந்தக் குழந்தைகள் வார்ட்டில் யாருடைய கவனிப்பும் இல்லாமல் தனியே விடப்பட்ட 6 வயது சிறுவனால், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
வட பிரான்ஸ் நகரான Lille-லில் உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனையில் இந்த பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. Zayneb-Cassandra எனும் அக்குழந்தை இம்மாதத் தொடக்கத்தில் ஏழரை மாத குறைப்பிரசவத்தில் 23 வயது இளம் தாய்க்குப் பிறந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அது திடீரென மரணமடைந்ததால் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். முதல் குழந்தை அதுவும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை என்பதால், தாயின் துயரத்தைக் தேற்ற முடியவில்லை.
இதையடுத்து விசாரணை நடத்தியதில், பிறந்த குழந்தைகளைத் தனியாக வைத்துக் கண்காணிக்கும் வார்ட்டில் தனியாக சுற்றிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் தான், குழந்தையை இழுத்து தரையில் விழச் செய்தது தெரிய வந்தது.
ஏற்கனவே ஒரு முறை அங்கு நுழைந்தவன், அக்குழந்தை பொம்மை போல் இருப்பதாகக் கூறியுள்ளான்; இந்நிலையில் சம்பவத்தின் போது பொம்மை என்றெண்ணி குழந்தையைப் பிடித்து அவன் தூக்கியிருக்கக் கூடும்; அப்போது குழந்தையின் தலை தரையில் பட்டிருக்க வேண்டுமென சந்தேகிக்கப்படுகிறது.
மூளையில் பலத்த காயமேற்பட்டு குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்தபோது, அச்சிறுவனும் அருகிலிருந்தான். அவன், மகப்பேறு வார்ட்டில் இன்னொரு நோயாளியின் மகன் என கண்டறியப்பட்டது.
காலை 7 மணியிலிருந்தே மருத்துவமனையில் அங்குமிங்கும் ஓடி அவன் தொந்தரவை ஏற்படுத்தியுள்ளான். தாதியர்களே அவன் ‘தொல்லை’ தாங்காமல் அவனது தாயிடம் புகாரளித்துள்ளனர்.
எனினும் எப்படியோ குழந்தைகள் வார்ட்டில் நுழைந்து கடைசியில் பச்சிளங்குழந்தையின் மரணத்திற்கே அவன் காரணமாகி விட்டான்.
ஒரு பக்கம் போலீஸும் மறுபக்கம் மருத்துவமனை நிர்வாகமும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.