
அரசாங்கத்தில் பதவிகள் இல்லாதது மஇகாவின் பலவீனம் அல்ல; மாறாக, அரசாங்கத்தையோ பிற கட்சிகளையோ சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, கட்சி சொந்தக் காலில் நிற்பதற்கான வாய்ப்பு என மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற பேராக் மாநில மஇகா பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், பதவிகளையும் அதிகாரத்தையும் நம்பி மட்டுமே ஒரு கட்சி செயல்படக்கூடாது என்றார்.
பதவி இல்லாதபோதும் இந்தியச் சமூகத்தின் தேவைகளுக்காக மஇகாவால் தொடர்ந்து குரல் கொடுக்கவும் போராடவும் முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
“அரசாங்கத்தில் பதவி இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். எந்த அரசியல் கூட்டணியையும் முழுமையாகச் சார்ந்திருக்காமல், சமூகத்தின் நலனை முன்னிறுத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டும்,” என அவர் கூறினார்.
1950, 1960 மற்றும் 1970-களில் மஇகா தலைவர்கள் பதவிகளையும் செல்வாக்கையும் மட்டுமே நம்பாமல், இந்தியர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதையும் விக்னேஸ்வரன் நினைவுகூர்ந்தார்.
ஆனால் கடந்த காலத்தை மட்டுமே பேசி இன்றைய இளைஞர்களின் ஆதரவை திரட்ட முடியாது. இன்றைய சூழலில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது முக்கியம் என விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் திட்டங்களையும் உதவிகளையும் இந்தியச் சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதுடன், கட்சியின் சொந்த பலத்தையும் மக்கள் ஆதரவையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார்.



