
புதுடெல்லி: செப்.12-மலேசியா – இந்தியா பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த, இரு நாட்டு வர்த்தகச் சமூகங்களை நேரடியாக இணைக்கும் புதிய கூட்டாண்மைத் தளத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனிடம் ஒப்படைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்வார் தலைமையிலான மலேசியத் தூதுக்குழுவில் முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனியுடன் ரமணனும் பங்கேற்றார்.
இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக வலையமைப்புகளை விரிவுபடுத்தி, புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தக் கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த முயற்சி வெறும் முதலீட்டு எண்ணிக்கைகளில் முடிவடையாமல், மலேசியர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு, உயர்ந்த வருமானம் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என ரமணன் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர், தொழில்முறை சேவைகள் மற்றும் நவீன உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியாவின் வலிமையைப் பயன்படுத்தி, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிற்குள் வரும் முதலீடுகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு உயர்மதிப்புமிக்க வேலைவாய்ப்புகளாக மாறுவதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்றும் ரமணன் தெரிவித்தார்.



