ஜோகூர் பாரு. ஜூலை 20 – ஸ்குடை (Skudai), தாமான் புலாய் பெர்டானாவுக்கு (Taman Pulai Perdana) அருகேயுள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சகோதர சகோதரிகளில் பதின்ம வயது பெண் ஒருவர் மூழ்கி மாண்டார்.
அந்த சம்பவத்தில் இதர நால்வர் உயிர் தப்பியதாக ஸ்குடை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சைபுல் பஹ்ரி சஃபர் (Saiful Bahri Safar) தெரிவித்தார்.
நேற்று மாலை மணி 3.38 அளவில் தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து உடனடியாக மீட்பு நடவடிக்கைக்காக 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
5 வயது மற்றும் 8 வயது சிறுமிகள், 12 வயது சிறுவன் மற்றும் 16 வயதுடைய பெண் ஆகியோரை அவர்களின் தந்தை பாதுகாப்புடன் காப்பாற்றியுள்ளார்.
அவர்கள் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து 4 மீட்டர் தூரத்தில் அவர்களது சகோதரியின் உடல் மீட்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வருவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாகவே முதலுதவி வழங்கப்பட்டும் அந்த இளம்பெண் மரணம் அடைந்ததாக சைபுல் கூறினார்.