
பாகிஸ்தான், ஜூலை-1- பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரிலுள்ள ஒரு பிரத்தியேக வகுப்பு மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு ஆசிரியர் உட்பட 5 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகள் 4 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளை, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்துக்குப் பிறகு மீட்புப் படையினரும் அப்பகுதி மக்களும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif), உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததும், தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் இதுபோன்ற கட்டிட விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது.



