
கோலாலம்பூர், ஜூன்-10-எவ்வித போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளும் இல்லாத பாதுகாப்பான ஓட்டுநர்கள், இனி தங்களின் வாகனக் காப்பீட்டுக் கட்டணத்தில் 65 விழுக்காடு வரை பெரும் தள்ளுபடியைப் பெற முடியும்.
சாலை விபத்துகளைக் குறைக்கவும், பாதுகாப்பான ஓட்டுநர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் Insentif Diskaun Cermat MADANI எனும் புதியத் திட்டம் இதற்காக அறிமுகப்படுத்தப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், சாலைப் போக்குவரத்து இலாகாவின் MySikap தரவுத்தளம் காப்பீட்டு நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டு, ஓட்டுநர்களின் பின்னணி சரிபார்க்கப்படும்.
குறிப்பிட்ட மதிப்பீட்டுக் காலத்தில் எவ்வித போக்குவரத்து சம்மன்களோ அல்லது Demerit புள்ளிகளோ பெறாத ஓட்டுநர்களுக்கு, அவர்களின் தற்போதைய NCD தள்ளுபடியுடன் சேர்த்து இந்த கூடுதல் சலுகை வழங்கப்படும் என லோக் விளக்கமளித்தார்.
வரும் செப்டம்பர் தொடங்கி முதல்கட்டமாகத் தனியார் வாகன உரிமையாளர்களுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த ஊக்கச் சலுகை, வாகனமோட்டிகள் சாலையில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க ஒரு வலுவான தூண்டுகோலாக இருக்கும் என அந்தோணி லோக் நம்பிக்கைத் தெரிவித்தார்.



