
சென்னை, மே-11-தென்னிந்திய அரசியலில் குறிப்பாக தமிழகத்தில் காலங்காலமாக ஆண்கள் வேஷ்டி சட்டை அணிவது ஒரு கலாச்சாரமாகவே இருந்து வருகிறது.
வெள்ளை வேஷ்டி சட்டையில் இருந்தாலே அரசியல்வாதிகள் என அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு அது பிரபலமாகும்.
எனினும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் குதித்த போது, அது உடைத்தெறிக்கப்பட்டது.
சாதாரண சட்டை, கால்சட்டை, செருப்பு சகிதமாக அவர் வலம் வந்தது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.
சட்டமன்றத்திலும், முந்தைய திமுக அரசின் துணை முதல்வராக அரசு விழாக்களிலும் கலந்துகொண்ட போதும் கூட, அந்த சாதாரண உடைகளிலேயே அவர் கலந்துகொண்டார்.
இப்போது அதைவிட முற்றிலும் பெரும் மாற்றமாக, தமிழக முதல்வர் விஜயின் ஆடை பாணி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘மெர்சல்’ பட பாணியில் வேஷ்டி சட்டையில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய், நேற்றைய பதவியேற்புச் சடங்கில் யாரும் எதிர்பாராத வகையில் கோர்ட் சூட்டு அணிந்து பங்கேற்றது பேசும்பொருளாகியுள்ளது.
இதுவரை இப்படி ஒரு ஸ்டைலான முதலமைச்சர்… ஏன் அரசியல்வாதியைக் கூட பார்த்ததில்லை என, அவரின் தீவிர இரசிகர்கள் மட்டுமின்றி இணையவாசிகளும் ஆச்சரியத்தில் பாராட்டு மழை பொழிகின்றனர்.
அதே சமயம், மாநில முதல்வராகப் பொறுப்பேற்பவர் பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்பதா என எதிர்மறை கருத்துகளும் பறிமாறப்பட்டன.
மேலும் சிலர், நவீன ஆடையோ, பாரம்பரிய உடையோ, அவரவர் வசதிக்கு ஏற்ப அணிவதை யாரும் குறைசொல்லவோ விமர்சனம் செய்யவோ கூடாது என்றனர்.
தேர்தலில் வரலாற்றுப் பூர்வ வெற்றியைப் பதிவைச் செய்த விஜய், முதல் நாளிலேயே முதல்வரின் உடையில் மாற்றத்தை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



