
கோலாலம்பூர், ஆகஸ்ட்-11-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மானுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கடந்த ஜூன் 14-ஆம் தேதி பஹாங்கில் நடைபெற்ற அரசியல் உரையொன்றில் துவான் இப்ராஹிம் பேசிய பேச்சு தொடர்பானது.
இந்த உரையின் வீடியோ யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டன.
தம்மை விமர்சிப்பவர்களை ஒடுக்க தாம் போலீஸாரைப் பயன்படுத்துவதாக அந்தப் பேச்சில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அன்வார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்குத் தாம் ஒருபோதும் உத்தரவிட்டதில்லை எனக் கூறியுள்ள பிரதமர், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை என்றும் மறுத்துள்ளார்.
எனவே, அந்தப் பேச்சை மேலும் பரப்புவதற்குத் தடை உத்தரவு, சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து அந்த வீடியோக்களை உடனடியாக நீக்குவதற்கான உத்தரவு மற்றும் இழப்பீடு ஆகியவற்றை அன்வார் கோரியுள்ளார்.



