
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 – பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.
சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அந்நபரைத் துரத்தி சென்ற பிறகு, பத்து மாவுங் பேருந்து நிறுத்துமிடத்தில் அந்த ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்தனர்.
39 வயதான அந்த ஓட்டுநருக்கு பொது சேவை வாகன (PSV) உரிமம் இல்லை எனவும் பேருந்தின் சாலை வரி மற்றும் காப்பீடும் காலாவதியாகியிருந்தது என்றும் பினாங்கு மாநில JPJ இயக்குநர், சுல்கிஃப்லி இஸ்மாயில் (Zulkifly Ismail) கூறினார்.
மேலும் அந்த ஆடவர் 10 JPJ சம்மன்களை கட்டாமலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் 215 பேருந்துகளைச் சோதித்ததில் 26 தொழிற்சாலை பேருந்துகளுக்கு விதிமீறல் காரணமாக சம்மன் வழங்கப்பட்டதுடன், மொத்தம் 81 சம்மன் மற்றும் 20 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சில நிறுவனங்கள் வெளிநாட்டு ஓட்டுநர்களை தொழிற்சாலை பேருந்துகளுக்கு ஓட்டுநராக நியமித்திருந்தன; இது பொது நிலப் போக்குவரத்து சட்டத்திற்கு முரணானது என்றும் அனைத்து நிறுவனங்களும் ஓட்டுநரின் உரிமம் மற்றும் PSV அனுமதி ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.



