
ஜோர்ஜ்டவுன், மார்ச்-23-பினாங்கில் நிலவும் ஆலயப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண அவற்றின் நிர்வாகங்களுடன், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை இணைந்து செயல்படும்.
மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் அதனைத் தெரிவித்துள்ளார்.


பினாங்கில் பல ஆலயங்கள் நிலப்பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றன. நிலப்பட்டா பிரச்னையும் உண்டு.
இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதற்கான வழிகள் முன்னெடுக்கப்படும்.
இதற்கு ஆலய நிர்வாகங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும்.
இதன் மூலம் ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என, அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“மஹிமா யாருக்கும் போட்டி அல்ல; நாட்டிலுள்ள இந்து ஆலயங்களை ஒருங்கிணைப்பதே அதன் முதன்மை இலக்கு” என்றார் அவர்.
இதன் அடிப்படையில் தான் நாடு தழுவிய நிலையில் மஹிமாவின் Roadshow மற்றும் Meet and Greet சந்திப்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என அவர் கூறினார்.
முன்னதாக, அப்பயணத் தொடரின் ஒரு பகுதியாக சிவகுமார் பினாங்கிற்கு வருகை மேற்கொண்டார்.


சிம்பாங் அம்பாட், ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆலய நிர்வாகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சிவகுமாருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இவ்வேளையில், 100 ஆலய நிர்வாகங்கள் மஹிமாவில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ள தகவலையும் அவர் வெளியிட்டார்.



