
கோலாலம்பூர், செப்டம்பர் 18 – நாடு முழுவதும் 34 பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரத்தின் படி, சிலாங்கூர் ஜோஹான் செத்தியா பகுதியில் அதிகபட்சமாக 198 புள்ளிகள் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான APIMS தெரிவித்துள்ளது.
அதிகபட்ச அளவைத் தொடர்ந்து, கூச்சிங் 192, சமரஹான் 185, நீலாய் மற்றும் செரியான் தலா 181 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளன. பேராக் செரி மஞ்சோங் பகுதியில் 175, தாசெக் ஈப்போவில் 173 என்ற அளவில் IPU பதிவாகியுள்ளது. புத்ராஜெயா மற்றும் சிரம்பான் தலா 171 புள்ளிகளையும், ஷா ஆலம் 170 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.
இதனிடையே, மேலும் 31 பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான நிலையில் காணப்படுகிறது. சரவாக் முக்கா (Mukah), சுங்கை பட்டானி, மிண்டன், செபராங் ஜெயா, கோலா திரெங்கானு, பாசிர் கூடாங், தாவாவ் மற்றும் ரொம்பின் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மறுபுறம், லிம்பாங் மற்றும் சண்டாக்கான் பகுதிகளில் காற்றுத் தரம் நல்ல நிலையில் உள்ளது. சில பகுதிகளில் புகைமூட்டம் நீடித்து வரும் நிலையில், பொதுமக்கள் காற்றுத் தர நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, பாதிப்பு அதிகமாக உள்ள நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



