Latestமலேசியா

பெர்த்தில் மலேசியப் பெண் உயிரிழப்பு; குடும்ப வன்முறையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது — லிம் ஹுய் யிங்

கோலாலம்பூர், செப்டம்பர்-11,ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள வீட்டில், 28 வயதான மலேசியப் பிரஜை தான் கா மிங் (Tan Kah Ming) படுகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் கொடூர சம்பவத்தில், அவரது துணைவரே (partner) அவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே கைதுச் செய்யப்பட்ட அவரது 38 வயது துணைவர் மீது தற்போது கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

​இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மலேசிய மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying), குடும்ப வன்முறையை ஒருபோதும் தனிப்பட்ட குடும்பப் பிரச்னையாகக் கருதி மறைக்கவோ அல்லது இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளவோ கூடாது என உறுதியாக வலியுறுத்தினார்.

​பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் தாயை இழந்து தவிக்கும் 3 பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறிய அவர், வன்முறையை எதிர்கொள்பவர்கள் அமைதி காக்காமல் உடனடியாக உதவி நாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

​மலேசியாவில் 24 மணி நேரமும் செயல்படும் Talian Kasih 15999 என்ற உதவி எண் மற்றும் 019-261 5999 என்ற வாட்சப் வழியாகப் பொது மக்கள் உடனடி உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற முடியும்.

​மேலும், 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகப் பாதுகாப்பும் தங்குமிட வசதியும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

​பெர்த் சம்பவத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகளின் சட்டப்பூர்வ விசாரணையை மதிப்பதாகத் தெரிவித்த துணை அமைச்சர், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் துயரத்திலிருந்து மீண்டு வர அவர்களின் தனியுரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, கா மிங் விட்டுச் சென்றுள்ள 3 முதல் 7 வயதுடைய 3 குழந்தைகளின் எதிர்காலப் பராமரிப்புக்காகத் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிதித்திரட்டு இயக்கத்தில் சுமார் 36,000 ஆஸ்திரேலிய டாலர் அதாவது மலேசிய மதிப்பில் 100,000 ரிங்கிட் நிதி திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!