
கோலாலாம்பூர், ஏப்ரல்-2-போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டி மரண விபத்துகளை ஏற்படுத்திய 2 தனித்தனி வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் காணப்படும் வேறுபாடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போதைப்பொருள் உட்கொண்டு அல்லது மதுபோதையில் வாகனமோட்டும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
ஆனால் அத்தகைய ஒரே மாதிரியான வழக்குகளில், வெவ்வேறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது குறித்து தேசிய சட்டத் துறைத் தலைவர் விளக்கமளிக்க வேண்டுமென, ராயர் கேட்டுக் கொண்டார்.
கிள்ளானில் மார்ச் 29-ஆம் தேதி நிகழ்ந்த மரண விபத்தில், போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் p-hailing ஓட்டுநரான Amirul Hafiz Omar எனும் 33 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
இந்த குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அதே நேரத்தில், பேராக் , பத்து காஜாவில் பிப்ரவரி 9-ஆம் தேதி நிகழ்ந்த இதே போன்றதொரு விபத்தில், 65 வயது சரஸ்பதி கோபால், 34 வயது சரளா தேவி, 3 வயது ஷாஸ்திகா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
ஆனால், அந்த வழக்கில், போதைப்பொருள் தாக்கத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர், சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அபாயகரமாக வாகனமோட்டியதாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு வழக்குகளுக்கிடையிலான குற்றச்சாட்டுகளில் உள்ள வேறுபாடுகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக ராயர் தெரிவித்தார்.
எனவே, நாட்டின் நீதி பரிபாலனத் துறையில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, சட்டத் துறை அலுவலகம் தெளிவான விளக்கத்தை அளிக்க ராயர் வலியுறுத்தியுள்ளார்.



