
வத்திகன் சிட்டி, அக்டோபர்-14,கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் 14-ஆம் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
71 வயதான அவருக்கு, இத்தாலியின் ரோம் நகரிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் சிறிய கட்டி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த அறுவை சிகிச்சையில், அவரது வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்டது.
அப்போது மேற்கொள்ளப்பட்ட திசு பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், எவ்விதச் சிக்கலும் ஏற்படவில்லை என்றும் வத்திகன் சிட்டி அறிவித்துள்ளது.
போப்பாண்டவர் தற்போது மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவர் சுமார் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அக்டோபர் 20-ஆம் தேதி வரையிலான அவரது பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் சிக்காகோ நகரைப் பூர்வீகமாகக் கொண்ட 14-ஆம் லியோ, கடந்தாண்டு மே மாதம் கத்தோலிக்கத் திருச்சபையின் 267-ஆவது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



