மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி; மோடி அரசுக்கு பின்னடைவு

புது டெல்லி, ஏப்ரல்-18,
இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் 131-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையான லோக் சபாவில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியுற்றது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின.
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை.
பெண்களுக்கான இடஒதுக்கீடு எனப் பெயரிடப்பட்டாலும், இந்த மசோதா, பெரும் சர்ச்சையாகியுள்ள தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவுடன் இணைக்கப்பட்டிருந்ததால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக, தி.முக. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கருப்பு உடையணிந்து எதிர்ப்பைக் காட்டினர்.
இது இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சி என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அதேவேளையில், தென் மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தும் எதிர்க்கட்சிகள் மசோதாவை ஆதரிக்கவில்லை.
இதையடுத்து, பெண்களின் உரிமையை எதிர்கட்சிகள் தடுத்துவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த மசோதாவின் தோல்வியை ஜனநாயகத்தின் வெற்றி என எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்…



