கோலாலம்பூர், ஏப் 17 – மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை மிரட்டுவதற்காக சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் டாக்டர மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். உத்தரவுகளை பின்பற்றத் தவறினால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருப்பதாக தமது X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். நிதி விவரங்கள் தொடர்பான விசாரணைக்கு உள்ளானவர்கள் அது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்ற MACC விசாரணை தொடர்பில் மகாதீர் கருத்துரைத்துள்ளார். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடந்த 40 ஆண்டுகளுக்கான அனைத்து பட்டுவாடா குறித்து பெரிய அளவிலான ஆய்வு தேவைப்படுகிறது. பெரும்பாலோர் நீண்ட காலத்திற்கு தங்களது நடவடிக்கைக்கான விவரங்களை கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில் விவரங்களை வழங்க தவறினால் திட்டமிட்டே தகவலை மறைத்ததற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படலாம். இதனால் பெரிய அளவிலான சட்ட நடவடிக்கை சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறுவது ஒருவகை மிரட்டல் என மகாதீர் குறிப்பிட்டார். மாறாக தாங்கள் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அடையாளம் கண்டு அது தொடர்பான கேள்விக்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் குற்றச் செயல் தொடர்பான எந்தவொரு அடையாளத்தையும் தெரிவிக்காமல் பொதுவான கோரிக்கையைத்தான் நாங்கள் பார்க்கிறோம் என மகாதீர் கூறினார்.