
கோலாலம்பூர், செப்டம்பர் 15 – மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆபாச நகைச்சுவை பேசிய அம்னோ சிப்பாங் பிரிவு தலைவர் நூராஸ்லி சைட் (Noorazli Said) மீது காவல்துறை விசாரணை நடத்த வேண்டுமென தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார்.
குற்றவியல் , தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டங்களுக்கு கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் கத்தோலிக்க மதகுரு மற்றும் கன்னியாஸ்திரி தொடர்பாக நூராஸ்லி பேசிய நகைச்சுவை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
மத நிறுவனங்கள், மதகுருமார்கள் மற்றும் புனித நம்பிக்கைகளை நகைச்சுவைக்குப் பயன்படுத்தக் கூடாது என ஆரோன் கூறியுள்ளார். இதற்கிடையே, கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நூராஸ்லி மன்னிப்பு கோரியுள்ளார்.



