பேங்கோக், ஜூலை 3 – தாய்லாந்தில் கடந்த 52 ஆண்டுகளாக, மதிய நேரம் மது விற்பனைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை, அந்நாட்டு பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) முடிவுக்கு கொண்டு வரக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம், சிக்கனமாக செலவு செய்யும் பயனீட்டாளார்கள் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தாய்லாந்து சுற்றுலாத் துறையை உந்தச் செய்ய, சுற்றுலாத் துறையின் பரிந்துரைக்கு ஏற்ப, ஸ்ரேத்தா அந்த தடையை அகற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மதியம் மணி இரண்டு முதல் மாலை மணி ஐந்து வரை, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டங்களை மாற்ற கோரி உணவக உரிமையாளர்கள் செய்திருக்கும் பரிந்துறைகளை பிரதமர் ஸ்ரேத்தா ஆராய்ந்து வருவதாக, ராயல் தாய் அரசாங்க இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய நடவடிக்கை, தாய்லாந்துக்கு வருகை புரியும் அந்நிய சுற்றுப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதோடு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், பார் கேளிக்கை மையங்களுக்கும் அது ஒரு நிவாரணமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில், 1972-ஆம் ஆண்டு தொடங்கி, மதியம் மூன்று மணி நேரம், மது விற்பனை தடை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.